visits since Apr 01, 2014

Besucherzaehler

வின்ரி அமைப்புக்கள்
உங்கள் கருத்து

 கே.எம்.செல்லப்பாவின் முயற்சி

 யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற யோசனை 1933ஆம் ஆண்டில் கே.எம். செல்லப்பா என்ற படித்த கணவானின் மனதில் உதித்தது. திரு செல்லப்பா தமது இல்லத்தில் ஒரு சிறிய நூலகத்தை ஆரம்பித்தபோது அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பம் ஒரு எளிமையான முறையில் வெளிக்காண்பிக்கப்பட்டது. அனுமதிக் கட்டணம் இன்றி இலவசமாக அந்த நூலகத்தை எவரும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. அடுத்தவருடம் திரு.செல்லப்பாவின் புனித கைங்கரியம் குறித்து அகமகிழ்ந்த நலன்விரும்பிகள் சிலர் சம்பூர்ணமான நூலகம் ஒன்றை அமைப்பதென முடிவுசெய்தார்கள். 1934ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் திகதி கூடிய இவர்கள் நூலகக்குழு ஒன்றை அமைத்தார்கள்.அவ்வேளையில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய திரு.சி.குமாரசுவாமி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். வண.ஐஸக் தம்பிஐயா துணைத்தலைவராகவும் திரு.கே.எம்.செல்லப்பா திரு.சி.பொன்னம்பலம் ஆகியோர் கூட்டு செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர் அயராது பாடுபட்டு நூல்கள், சஞ்சிகைகள், பெறுமதிவாய்ந்த புராதன ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை சேகரித்து 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி யாழ்.பெரியாஸ்பத்திரிக்கு அருகில் அறை ஒன்றை வாடகைக்குப்பெற்று அதில் நூலகம் ஒன்றை ஆரம்பித்தார்கள். தொடக்கத்தில் சுமார் 844 நூல்கள், 30 செய்திப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியனவே நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
 
திரு.செல்லப்பாவின் அயராத, தொடர்ச்சியான முயற்சியினால் நூலகத்திற்கென 1184 ரூபா 22 சதம் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது. அதுவே நூலகத்திற்கான மூலதனமாகும்.இவ்விதமாக ஆரம்பிக்கப்பட்ட பொது நூலகம் யாழ் நகரவாசிகள் மத்தியில் மாத்திரமின்றி குடாநாட்டிலுள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற்றதுடன் இளைஞர்கள், வயதுவந்தவர்கள் அனைவரும் பயன்பெறத் தொடங்கினர். நூலகக்குழுவினர் எடுத்த தீர்மானத்திற்கு அமைய 1936ஆம் ஆண்டில் மாநகர கட்டடத்திற்கும் நகர மண்டபத்திற்கும் அருகிலுள்ள கட்டடம் ஒன்றிக்கு நூலகம் மாற்றப்பட்டது. அங்கத்தவர்களுக்கு நூல்களை வாகைக்கு கொடுக்கும் சேவை இக்கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சாதாரண கட்டணமான 3 ரூபாவைச் செலுத்தி எவரும் நூலகத்தில் அங்கத்துவம் பெறக்கூடியதாக இருந்தது. மாணவர்கள் உட்பட
பலர் அங்கத்துவம் பெற்று நூல்களை வாகைக்கு பெற்று பயன்பெற்றனர்.
 
நூலகத்தின் வளர்ச்சி
 
1936ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ஆம்திகதி யாழ் மத்திய கல்லு}ரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பெறுமதிவாய்ந்த ஓலைச்சுவடிகளை தேடிப்பெற்று அவற்றை நூலகத்தில் பேணிக்காப்பதென தீர்மானிக்கப்பட்டது. யாழ்குடா, வன்னி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட கிராமங்களில் இருந்து பெருந்தொகையான ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டன.நூலகம் மக்கள் மத்தியில் மேலும் பிரபல்யம் அடையவே நிரந்தரக்கட்டிடம் ஒன்றில் சகல வசதிகளும் அடங்கிய நவீன நூலகம் ஒன்றின் அவசியம் ஒன்று உணரப்பட்டது. இந்தவிடயத்தில் அக்கறைகொண்ட அனைவரும் அவ்வேளையில் யாழ் மாநகர சபை முதலாவது முதல்வராக பணியாற்றிய சாம் சபாவதி தலைமையில் மகாநாடு ஒன்றைக்கூட்டி புதிய நூலக கட்டிடத்திற்கு நிதி சேகதிப்பது பற்றி ஆராய்ந்தார்கள். இந்திய நடன, இசை கலைஞர்களை வரவழைத்து களியாட்டவிழா ஒன்றையும் அதிஷ்டஇலாபச்சீட்டொன்றையும் நடத்துவதென மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.இந்த முயற்சிகளில் இருந்து ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்ததிலும் கூடுதலான நிதி கிடைத்தது.
 
இதனை அடுத்து 1953 ஆம் ஆண்டில், புனித சம்பத்திரிசியார் கல்லூரியின் அப்போதைய அதிபர் வண.டோங் அடிகளால் உட்பட பல கல்விமான்கள், பிரமுகர்கள் அடங்கிய புதிய நூலகக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நூலக உருவாக்கத்தில் டோங்அடிகளார் ஆற்றிய பங்களிப்பை மனதில்கொண்டு அன்னாரின் உருவச்சிலை நூலக வாயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாநகர சபைகட்டடத்திற்கு அருகில் புதிய நூலக கட்டடத்தை நிர்மானிப்பது என நூலககுழு தீர்மானித்தது. இதற்கென பழைய ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் நன்கு பொருத்தமான காணி ஒன்று தெரிவு செய்யப்பட்டது. கட்டடத்தின் வடிவமைப்பு உள்ளுர் மக்களின் கலாசாரத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் திராவிட கட்டிடக்கலை அம்சங்களைக்கொண்டதாக இருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அந்தக்காலத்தில் திராவிட கட்டடக்கலையில் திறமைபெற்ற இலங்கை கலைஞர்கள் எவரும் இருக்கவில்லை. இதனால் நூலககுழு இந்தியாவின் உதவியை நாடியது. சென்னையிலுள்ள திராவிடக்கட்டடக்கலை நிபுணரான் எஸ். நரசிம்மன் என்ற கலைஞரிடம் யாழ் நூலக கட்டடத்தை வடிவமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. சர்வதேச தரங்களுக்கு அமைய நூலகத்தை அமைப்புது தொடர்பாக ஆலோசனையைப் பெறுவதற்கான புது டில்லியிலிருந்து நூலகவிஞ்ஞானத்தில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலககுழுவினால் அழைக்கப்பட்டார்.
 
நிலையான நூலகம்
 
நரசிம்மன் தயாரித்த முன்னோடித்திட்டத்தில் நூலகம் நிறுவப்பட இருக்கும் காணியில் முன்பக்கமாக ஒரு கட்டிடமும் அதனுடன்தொடர்புபட்டதாக பின்பக்கம் ஒரு கட்டடமும் வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொரு கட்டடத்திலும் 2 சிறகுகளைக்கொண்ட மத்திய மண்டவம் ஒன்றும் அடங்கியிருந்தது. முதலில் கையிலிருக்கும் நிதியைக்கொண்டு முன்பக்க கட்டடத்தையும் அதன் இணைப்புப்பிரிவையும் கட்டுவதென் தீர்மானிக்கப்பட்டது. யாழ் மாநகர முதல்வர் சாம் சபாவதி 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம்திகதி முதலாவது கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இந்தியாவிலிருந்தும் இலங்கையின் சகல பகுதிகளில் இருந்தும் பல்வேறு கல்விமான்களும் நலன் விருமபிகளும் அரசியல் தலைவர்களும் அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்துகொண்டார்கள்.கட்டடத்தின் முதலாவது கட்டத்தில் நிலமட்டத்திலிருந்து 3 மாடிகளைக்கொண்ட கட்டடத்தில் மத்திய கோபுரம் ஒன்றும் 2 பக்கங்களிலும் இரண்டுமாடிகளைக்கொண்ட சிறகுகளும் அமைந்திருந்தன.முதலாவது கட்டட வேலைகள் பூர்த்தியடைந்து அவ்வேளையில மாநகர முதல்வராக இருந்த அல்ஃபரட்துரையப்பாவினால் 1959ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம்திகதி திறந்துவைக்கப்பட்டது.
 
1967ஆம்ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி சிறுவர் பிரிவு ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் 1971ஆம் ஆண்டில் விரிவுரைகள், கருத்தரங்குகள், கலாசார நிகழ்வுகள் ஆகியவற்றை நடாத்துவதற்கான கேட்போர் கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. நலன்விரும்பிகள், வெளிநாட்டு தூதரகங்கள், தர்ம ஸ்தாபனங்கள் ஆகியவற்றிடம் இருந்து ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துசேர ஆரம்பித்தன. நூலககுழுவும் பெறுமதிவாய்ந்த நூல்களையும், ஆவணங்களையும் பெற்றுக்கொடுத்தது. விரைவில் நூலகம் சகல வசதிகளையும்கொண்ட சம்பூர்ண நூலகமாக விளங்கியது. இலங்கையில் மாத்திரமன்றி அயல்நாடான இந்தியாவிலும் இந்த நூலகம் நன்கு பிரபல்யம் பெற்றது. இந்திய கல்விமான்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆகியோரும் யாழ் பொதுநூலக வசதிகளைப் பயன்படுத்தினார்கள்.ஒருஇலட்சத்துக்கும் அரிய நூல்கள், ஆவணங்களும் கையெழுத்துப்பிரதிகளும் ஓலைச்சுவடுகளும் நூலகத்தில் காணப்பட்டன. சந்தன மரப்பெட்டிகளில் இவற்றில் பல சேகரித்து வைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் நூறு வருடங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட செய்திப்பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் நூலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. சுமார் 10000 கையெழுத்துஆவணங்கள், 1586ஆம் ஆண்டின் பிரசுரிக்கப்பட்ட றோமன் கத்தோலிக்க நூல்களும் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டன. இவற்றில் சில ஸ்பானிய மொழியில் இருந்தன.
 
நூல்களின் வரலாறு
 
றோபட்நொக்ஸ் என்பவர் கண்டி சிறைச்சாலையில் 1660ஆம் ஆண்டுஇருந்தபோது அவர் எழுதிய இலங்கையின் வரலாறு என்ற நூலின் பிரதி ஒன்றும் பிலிப்பையபுட்டியஸ் என்பவர் 1672ஆம் ஆண்டில் எழுதிய ஒல்லாந்து ஆட்சியில் இலங்கை என்ற நூலும் யாழ் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த நூல்களில் சிலவாகும். இலங்கைத் தமிழறிஞரும் இலங்கை புகழ்பெற்ற கலை விமர்சகருமான கலாநிதி ஆனந்தகுமாரசாமி பற்றிய 700 நூல்களும் இருந்தன. இவற்றை மலேசியாவைச்சேர்ந்த திரு.துரைராஜசிங்கம் அன்பளிப்பாக வழங்கியிருந்தார். வண.ஐஸக் தம்பிஐயா 850நூல்களை அன்பளிப்பு செய்திருந்தார்.கதிரவேலுப்பிள்ளை 100 நூல்களை அன்பளிப்பு செய்திருந்தார்.பல்வேறு நாடுகளையும் வெளியீட்டகங்களையம் சேர்ந்த பெருந்தொகையான அருஞ்சொற்களஞ்சியங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. அகராதிகள், தேசப்படப்புத்தகங்கள், தேசப்படங்கள், சாஸ்திரம் சம்பந்தமான நூல்கள், வான சாஸ்த்திர நூல்கள் ஆகியனவும் நூலகத்திற்கு கிடைத்திருந்தன. சிறுவர் பிரிவில் இராமாயணக்காவியத்தின் சிறு பதிப்புக்கள் வைக்கப்பட்டு இருந்தன.நன்கு திட்டமிடப்பட்ட முறையில் நூலகம் இயங்கிவந்தது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றாய் இது கருதப்பட்டது 1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ் பொதுநூலகம் திறந்து வைக்கப்பட்டது.
 
வாசகர்களின் துன்ப நாள்
 
1989ஆம் ஆண்டு ஜுன் மாதம் சில மனிதாபிமானமற்ற விசமிகளால் அது தீக்கிரையாக்கப்பட்டது வரை சாதி, இன, மத வேறுபாடின்றி இந்த நூலகம் சகலரதும் அறிவுப்பசியைத்தீர்க்கும் ஒரு ஆசானாக விளங்கிவந்தது.அரைநூற்றாண்டு காலமாக பற்பல கஸ்டங்களுக்கு மத்தியில் அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த விலைமதிக்க முடியாத அறிவுப்பொக்கிசங்கள் யாவும் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலாகின. இந்த பேரழிவுகேட்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தன. நூலகத்தில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த அங்கத்தவரான றோமன் கத்தோலிக்க மதகுரு வண.டேவிட் அடிகளால் இந்த அக்கிரமத்தைக் கேள்வியுற்றவுடன் மார்புவலி ஏற்பட்டு உயிர்துறந்தார். இந்த அறிவாலயத்திற்கு கொடியதீயை வைத்தவர்கள் இச்செயல் யாழ்ப்பாணத்திற்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதிலும், அகில உலகிலும் அறிவை வளர்க்க விரும்பும் அனைவருக்குமே பேரிழப்பு என்பதை உணரவில்லை.
 
நூலகம் எரிக்கப்பட்டதன் பின்னர் யாழ் மாநகர சபை அதனை புனரமைக்க விரும்பவில்லை. யாழ்ப்பாணம் எதிர்நோக்கிவந்த இன அழிவினை உலகத்தவருக்கு உணர்த்த ஒரு எடுத்துக்காட்டாக இதனைப் பயன்படுத்த விரும்பியதால் பட்டமரம்போல் காட்சியளிக்கும் அறிவாலயக்கட்டிடத்தை அப்படியே விட்டுவிடுவதென யாழ் மாநகரம் கருதியது. பதிலாக சேதமடைந்த கட்டடத்திற்கு பின்பக்கத்தில் மூலவரைபடத்தில் கட்டப்படாதிருந்த இரண்டாவது கட்டத்தை நிர்மானிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
புதிய கட்டட நிர்மான வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் 1983ஆம் ஆண்டு யுத்தம் மூண்டது. மீண்டும் அழிவுகள் ஆரம்பித்தன. புதிய கட்டடமும் சேதமடைந்தது. மனிதரால் தீமூட்டப்படாவிட்டாலும் இந்தத்தடவைகள் துப்பாக்கிரவைகள், விமானக்குண்டுகள்,ஷெல் ஏவுகணைகள் இக்கட்டடத்தை சல்லடை போட்டன. இரண்டு தசாப்த காலமாக கட்டடம் கவனிப்பாரற்று பாழடைந்து கிடந்தது. 1996ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிக்காகுமாரதுங்கவின் அரசு கைகொடுத்ததால் மீண்டும் புனர் நிர்மானவேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடையந்துள்ளன. சிதைந்துபோன கட்டிடம் மீண்டும் அதன் கம்பீரமான தோற்றத்தைப் பெற்றுவிட்டாலும் அதற்குள்ளிருந்து எரிந்துபோன தேடற்கரிய பொக்கிஷங்களை மீட்டுவிடமுடியுமா?
அறிவாலயப் புனரமைப்பு
 
தரைமட்டமாக்கப்பட்ட அறிவாலய கட்டடம் மீள் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் கம்பீரமான தோற்றத்தைப் பெற்ரு உள்ளது. வடபகுதிக்கு பெருமைதேடித்தந்த திராவிடக்கட்டடக்கலை அம்சங்கள் இந்நூலகக் கட்டடத்தில் முன்பிருந்தது. போலவே எவ்விதத்திலும் குறைவின்றி இடம்பெறக்கூடியதாக மிக நுணுக்கமாக நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றன.எரிக்கப்படுவதற்கு முன்னர் இக்கட்டிடத்தைப் பார்த்தவர்கள் இப்பொழுது அது புதுப்பிக்கப்பட்ட பின்னர் பார்க்கும்போது அது எரிக்கப்பட்டது. உண்மைதானா என்று வியப்படைகிறார்கள். கவர்ச்சிகரமான இக்கட்டிடத்தின் முன்னைய தோற்றம் வடபகுதி கட்டட கலைஞர்களின் மிக நுணுக்கமான கைவண்ணத்தில் அப்படியே மீளமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
மூலக்கட்டடத்தின் முகப்புத்தோற்றங்களை முன்னர் போலவே வைத்துக் கொண்டு நவீன நூலகமொன்றின் சர்வதேச தரங்களைப் பேணும்வகையில் பல்வேறு நவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டடத்திற்குள் அனேகமான தரைகள் வன்பொருள்களால் மூடப்பட்டுள்ள அதே வேளை தடங்கல்களைத் தவிர்க்கும் வகையில் ஒருவகையான பிளாஸ்ரிக் தரை ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் மண்டபங்களில் நிலைத்து நிற்கக்கூடிய கிரனைட் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. நூலகத்தைப் பயன்படுத்துவோர் வாசிப்பதற்கும் ஆராய்வதற்கும் ஏற்றவகையிலான ஒளியைப் பெறும் வகையில் நவீன மின்வெளிச்சமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சதீஸ் – ஜேர்மனி நன்றி.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

101

மேலும் செய்திகளை வாசிக்க

104

மேலும் செய்திகளை வாசிக்க

105

மேலும் தகவல்களை வாசிக்க

106

மேலும் கவிதைகளை வாசிக்க

100

மேலும் செய்திகளை வாசிக்க

103

மேலும் தகவல்களை வாசிக்க

103

மேலும் அறிந்து கொள்வோம்.

108

மேலும் படங்களை பார்வையிட